விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்
சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக இன்று நடைபெற இருக்கிறது. விவாதம் முடிந்ததற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான பதிலை அளிப்பார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று தொடங்கி இன்று நடைபெறுகிறது. முக்கியமாக சட்ட முன் வடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.
நேற்று மிக முக்கியமாக ஆன்லைன் சூதாட்டம், தனி அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன்வடிவு ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. இன்று முக்கியமாக 4 சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.
இந்திய தண்டனை சட்ட தொகுப்பு மூலமாக ஒரு சட்ட திருத்தமானது செய்யப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. அதற்கான சட்ட முன்வடிவும் தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது வேலூரில் இருக்கக்கூடிய திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இடம் தேர்வு செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்ய இருக்கிறார்.
மேலும் இதனை தொடர்ந்து முக்கியமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி தற்போது கட்டணம் உயர்வு மற்றும் பல்வேறு காரணமாக எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான சட்ட முன்வடிவும் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மேலும் ஜி.எஸ்.டி தொடர்பான சட்ட முன்வடிவும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.