Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டெல்லியில் தமிழக விவசாயிகள் 100 பேர் தற்கொலை செய்ய முடிவு. திருச்சியில் அய்யாக்கண்ணு பேட்டி.

0

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்றும், தினமும் ஒரு விவசாயி என 100 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் திருச்சியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 141 நாள்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், அதுவரை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

வி.எம். சிங்
அப்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத் தலைவர்களை ஒருங்கிணைத்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ ஆர்டினேஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் வி.எம். சிங் கலந்துகொண்டார். அவர் அந்தக் குழுவில் 25ஆவது நபராக இடம்பெற்றார். அவரும் 20 அமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக வி.எம். சிங் அறிவித்துள்ளார்.

மற்ற அமைப்பாளர்கள், நிர்வாகிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் வி.எம். சிங் அறிவித்தது கண்டிக்கத்தக்கது. அதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டிலிருந்து 100 விவசாயிகளுடன் டெல்லியில் சென்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமும் ஒரு விவசாயி என 100 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளோம். நாங்கள் எதிர்கால சந்ததியினருக்காகப் போராட்டம் நடத்துகிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இளைஞர்கள் ஆண்மைத்தன்மையை இழப்பார்கள். பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.

இதன் காரணமாகத்தான் டெல்லியில் அமைதியான வழியில் போராடிய விவசாயிகள் மத்தியில் வன்முறை ஏவப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு வேண்டிய நபர் ஒருவர் விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்து செங்கோட்டையில் கொடியை ஏற்றியுள்ளார்.

பாதுகாப்பு வளையத்தை மீறி அவர் உள்ளே சென்று இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக அந்த நபர் பணியாற்றியுள்ளார்.

விவசாயிகள் அமைதியான போராட்டத்தை கெடுக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். நான் டெல்லி செல்லும் தகவலறிந்தால் காவல் துறையினர் என்னை கைது செய்துவிடுகின்றனர்.

அதனால் நான் டெல்லி செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பேட்டியின் போது சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.