எங்கள் தலைவரை பற்றி பேச விஜயபாஸ்கருக்கு என்ன தகுதி உள்ளது ? கே.என்.நேரு காட்டம்.
எங்கள் தலைவரை பற்றி பேச விஜயபாஸ்கருக்கு என்ன தகுதி உள்ளது ? கே.என்.நேரு காட்டம்.
முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கையில்,
118 நிறுவனங்கள் இருக்கும்போது 8 நிறுவனங்களிடம் ஜி.பி.எஸ். கருவி வாங்க போக்குவரத்துத் துறை அளித்த உத்தரவுக்கு தடை வழங்கியுள்ள உயர் நீதிமன்றம் போக்குவரத்துச் செயலாளர் ஜனவரி 18ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
கெட்டிக்காரர் புளுகு எட்டு நாளைக்கு நிலைக்காது என்பது போல், ஊழலே நடக்கவில்லை என்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் புளுகு 24 மணி நேரம் கூட நிலைக்கவில்லை. தன் துறையில் ஊழலே இல்லை என்ற அமைச்சரின் பேட்டி இந்த ஆண்டு இறுதியின் மிகப்பெரிய நகைச்சுவை.
ஊழலுக்காகவே சிறைக்குப் போன முதல்வர் தன் கட்சியில் இருந்ததை மறந்துவிட்டு – திமுக பற்றியும், எங்கள் கட்சித் தலைவர் பற்றியும் பேசுவதற்கு விஜயபாஸ்கருக்கு என்ன தகுதி இருக்கிறது?
பேட்டி என்ற பெயரில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் அந்த உளறலின்போது எங்கள் கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றிற்குக் கூட பதில் இல்லை. எங்கள் கட்சித் தலைவர் எழுப்பிய ஊழல்களுக்கு நேரடியாகப் பதில் சொல்ல வக்கின்றி ஊழலே நடக்கவில்லை. ஆதாரமற்ற அறிக்கை என ஒற்றை வரியில் பதில் அளித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட கம்பெனியிடம் மட்டும் ஒளிரும் பட்டை வாங்க போக்குவரத்துத் துறை வெளியிட்ட உத்தரவிற்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றமே தடை போட்டு, இப்போது ஜி.பி.எஸ் கருவி விவகாரத்திலும் தடை போட்டிருக்கிறது. தனியார் கம்பெனிகள்தான் ஒளிரும் பட்டை உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறது என்று ஒரு புதிய கண்டுபிடிப்பைத் தனது பேட்டியில் கூறியிருக்கிறார் விஜயபாஸ்கர். அரசு நிறுவனம் தயாரிக்கிறது என்று எங்கள் கட்சித் தலைவர் கூறவே இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இந்தக் குதர்க்கமான மறுப்பு? ஒளிரும் பட்டை விவகாரத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர் அப்படியொரு உத்தரவை வெளியிட்டாரா இல்லையா? அந்த உத்தரவை எதிர்த்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததா இல்லையா? உயர் நீதிமன்றம் போக்குவரத்துத் துறை ஆணையரின் உத்தரவுக்குத் தடை விதித்ததா இல்லையா?
உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்ற அந்த உத்தரவில் மீண்டும் சில மாற்றங்களை மட்டும் செய்து போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினாரா இல்லையா? சவால் விடுகிறேன். அமைச்சர் விஜயபாஸ்கரால் இவற்றை மறுக்க முடியுமா?“தேசிய நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் குறித்த டெண்டரில் 25 கோடி ரூபாய் 900 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது என்று எங்கள் கட்சித் தலைவர் கூறியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்தக் கோப்புகள் எல்லாம் அவரிடம் உள்ளன. ஆதாரத்தை எங்கள் தலைவரிடம் கேட்கிறார்.
இருந்தாலும் நான் ஒரு சில கேள்விகளை மட்டும் இதில் கேட்கிறேன். எங்கள் தலைவர் கூறியதுபோல் டெண்டரில் பங்கேற்கும் கம்பெனி “200 சிஸ்டங்களை அமைத்துக் கொடுத்தால் போதும்” என்று முதலில் டெண்டர்விட்டது உண்மையா இல்லையா? பிறகு “1000 சிஸ்டங்கள்” என எண்ணிக்கையை உயர்த்தி டெண்டரைத் திருத்தியது ஏன்? அதேபோல் பங்கேற்கும் நிறுவனம் “150 சிஸ்டங்கள் செய்த நிறுவனமாகவும் – குறைந்தபட்சம் இதுபோன்ற இரு திட்டப் பணிகளை எடுத்துச் செய்த நிறுவனமாகவும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்” என்று டெண்டரில் கூறப்பட்டது உண்மையா இல்லையா? போக்குவரத்துத் துறையில் மட்டும் டெண்டர் திறக்கவில்லை. பலமுறை தள்ளி வைக்கப்பட்டது? கமிஷன் வரும் கான்டிராக்டருக்கு கைகாட்டவே டெண்டர் தள்ளிவைக்கப்பட்டது என்பதுதான் பேட்டியில் அவர் பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதில் தெரிகிறது. இதுதான் அதிமுக ஆட்சியில் நடக்கும் ஒளிவு மறைவற்ற டெண்டரின் லட்சணமா?
எனவே, விஜயபாஸ்கருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் கட்சித் தலைவர் எப்போதும் ஆதாரபூர்வமான ஊழல்களைத்தான் அறிக்கையாகக் கொடுக்கிறார்.
இன்னும் பல ஊழல் பட்டியல்கள் எங்கள் கட்சித் தலைவரிடம் அரசு அதிகாரிகள் கொடுத்து வைத்துள்ளார்கள். இது சமயம் வரும்போது “அதிமுக அமைச்சர்களை தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.