வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு காவல்துறை தடை
வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு காவல்துறை தடை
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு காவல்துறை தடை.
வைகை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான வருசநாடு மலை பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு நீா்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது வருகிறது.
அண்மையில் 12 ஆயிரம் கனஅடி நீர் வரை வந்தது. இதேபோல் முல்லை பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு திறப்பு அதிகமாக உள்ளது,
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தண்ணீர் 60 அடி தாண்டி உள்ளது.
இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்காக, வைகை அணையில் இருந்து, வினாடிக்கு, 3,000 கன அடி வீதம், நேற்று காலை முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை, வருசநாடு மூலவைகை, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகளின் நீர் வரத்தால், வினாடிக்கு 1,515 கன அடியாக உயர்ந்துள்ளது.
வைகை அணையில் இருந்து, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம் போக பாசனத்திற்கு, கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, முறைப்பாசன அடிப்படையில் வினாடிக்கு, 1,200 கன அடியும், குடிநீருக்காக, வினாடிக்கு, 69 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு, ஆற்றின் வழியாக, 21 நாட்களில் 1,792 மில்லியன் கன அடி நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.முதல் கட்டமாக ராமநாதபுரத்திற்கு நேற்று முதல், வரும் 6 வரை 1,093 மில்லியன் கன அடியும்,7 முதல் 12 வரை சிவகங்கைக்கு, 449 மில்லியன் கன அடியும், டிச 13 முதல் 17 வரை மதுரைக்கு, 250 மில்லியன் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
நீர் வரத்து அதிகரிப்பால் மதுரை நகரில் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீா் செல்கிறது. வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கல்பாலம், ஓபுளாபடித்துறை தரைப்பாலம், குருவிக்காரன் சாலை தற்காலிக தரைப்பாலம் ஆகிய 3 பாலங்களும் மூழ்கின. எனவே, கடந்த சனிக்கிழமை முதல் 3 பாலங்களும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிப்பட்டிருக்கிறது.
தரைப்பாலங்களில் பொதுமக்கள் செல்லாதவாறு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், வைகை ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என்றும், மீறி ஆற்றில் குளிப்பவா்கள் மற்றும் துணிகளை துவைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் எச்சரித்துள்ளன.