புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த சமையல் கலைஞர் ஹாஜி முகமது. இவரது மனைவி அமீனா பேகம் (வயது 26). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி அமீனா பேகத்திற்கு 4-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே இவர்களது வீட்டருகே வசிக்கும் கண்ணன் (58) என்பவர், நீங்கள் வறுமை நிலையில் உள்ளதால், குழந்தையை உங்களால் வளர்க்க இயலாது, எனவே கடைசியாக பிறந்த குழந்தையை, குழந்தை இல்லாத நபருக்கு விற்று தருவதாக தம்பதியிடம் கூறியுள்ளார். வறுமை காரணமாக அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமீனாபேகத்தை ஈரோட்டிற்கு அழைத்து சென்ற கண்ணன், அங்கு ஒரு நபரிடம் குழந்தையை விற்று ரூ.1 லட்சத்தை பெற்று அமீனா பேகத்திடம் கொடுத்துள்ளார்.
அப்போது குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் ஆதார் எண்கள் ஒரு வெற்று பத்திரத்தில் எழுதப்பட்டு அமீனாபேகத்திடம் கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பினர் அமீனா பேகத்தை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.