குப்பை தொட்டியில் ஆதார் கார்டுகள். அதிகாரிகள் விசாரணை
குப்பை தொட்டியில் ஆதார் கார்டுகள். அதிகாரிகள் விசாரணை
தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே ராஜபாளையம் பகுதியில் தனியார் பள்ளி அருகேயுள்ள குப்பைத் தொட்டியை சுத்தம் செய்தபோது டெலிவரி செய்யப்படாத 50க்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்தன. குறிப்பாக தபால் அலுவலகத்தில் ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் கவர் திறக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து கார்டுகளை தூய்மை பணியாளர்கள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு கொண்டுசென்றதோடு அங்கிருந்த அலுவலர்களிடம் விவரம் தெரிவித்தனர். தூத்துக்குடி தபால் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் கடந்த மாதம் மாயமான ஒரு தபால் பையில் இடம்பெற்ற தபால்களாக அவை இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டனர். மேலும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த ஆதார் அட்டை தபால்களை அதிகாரிகள் பெற்று சென்றனர். அதில் தபால்பை காணாமல் போனதற்கு முன்பு உள்ள தேதி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் அந்த தபால்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து அவற்றை பெற்று சென்றுள்ளனர். மேலும் முக்கியதுவம் வாய்ந்த ஆதார் தபால்களை குப்பைத் தொட்டியில் போட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது