திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்த பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது.
தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காடசி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கோவில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று இரவு கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது.
மேலும், நாளை இரவு பிடாரி அம்மன் உற்சவம், நாளை மறுநாள் விநாயகர் உற்சவம் நடைபெறும். இதனையடுத்து அண்ணாமலையார் கோவில் மூன்று சன்னிதானத்தில் முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் 20ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன் பிறகு 10 நாள் உற்சவம் தொடங்குகிறது.
மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாடவீதியில் மாட வீதியில் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் உள்ள 5 பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வர உள்ளனர். முக்கியமான தீபம் வருகின்ற 29ம் தேதி ஏற்றப்பட உள்ளது. அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம், அண்ணாமலை உச்சிமலையில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பெரிய கோவில்களில் பக்தர்களை அனுமதிக்காமல் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் கோயில்களில் தற்போது வரை சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.