நவம்பர்18
மிக்கி மவுஸ் தினம்
மிக்கி மவுஸ் (Mickey Mouse) என்பது, ஒரு வேடிக்கையான விலங்கின் கேலிச் சித்திர (cartoon) கதாப்பாத்திரமாகும். கருத்துச் சித்திரமாகவும் விளங்கும் இது, அமெரிக்காவின் மகிழ்கலை வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பனி எனும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும். உலகப்புகழ் பெற்ற இந்த மிக்கி மவுஸ், 1928 ஆம் ஆண்டு, நவம்பர் 18 இல்,இயங்குபட தொழிற்கூடமாக உள்ள வால்ட் டிஸ்னி கம்பனியின் மகிழ்கலைத் தேவையின் பொருட்டு வால்ட் டிஸ்னி, மற்றும் யூபி ஐவர்க்சு
(Ub Iwerks) என்பவர்களால், உருவாக்கப்பட்டவையாகும்.
வால்ட் டிஸ்னியை ஆரம்ப காலத்தில் பல கம்பெனிகள் உதாசீனப்படுத்தியுள்ளன. ஆனால் அவர் இப்போது 22 ஆஸ்கர் விருதுகளுக்குச் சொந்தக்காரர். அவர் உருவாக்கிய கதாபாத்திரமே உலகப் புகழ் கார்ட்டூன் மிக்கி மவுஸ். இன்று மிக்கி மவுஸ் தினம். உலகச் சுட்டிகளின் மனம் கவர்ந்த கேரக்டர்களில் மிக்கிமவுஸ்க்கு எப்போதும் முதலிடம் தான்.
அதிகாரப்பூர்வமாக நவம்பர்18 ஆம் தேதி அறிமுகமானது மிக்கிமவுஸ் கேரக்டர். அமெரிக்காவின் அனிமேஷன் குறும்படமான ஸ்டீம்போட் வில்லி மூலம் நவம்பர் 18 , 1928ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் தான் மிக்கி மவுஸ் தன் முதல் திரைத்தோற்றம் எனலாம். மிக்கி தன்னை கேப்டனாக காட்டிக்கொண்டு ஜாலியாக படகோட்டிக்கொண்டிருக்கும் போது உண்மையான கேப்டன் பீட் வந்து சேர மிக்கியை பாலத்தில் கப்பலை நிறுத்தும்படி திட்டி அனுப்புகிறது.
இந்நிலையில் படகைப் பிடிக்க அவசரமாக மின்னி(பெண் மவுஸ்) ஓடி வர அதற்குள் படகு கிளம்பி விட கரையோரம் மின்னி தொடர்ந்து ஓடி வருவதைக் கண்ட மிக்கி, மின்னியைக் கிரேன் மூலம் தூக்கி படகில் சேர்க்கிறது. இப்படியாக ஏழு நிமிடங்கள் 22 நொடிகள் ஓடும் இந்தக் குறும்படமே முதல் மிக்கியின் அறிமுகப் படம். இதன் பிறகு இப்போது வண்ணமயமான மிக்கிமவுஸ் வெளியாகி உலகம் முழுக்க பிரபலமானது .
இதற்கு முதல் முதலில் குரல் கொடுத்தவரும் அந்தக் கேரக்டரை உருவாக்கிய வால்ட் டிஸ்னிதான். இப்பேர்ப்பட்ட மிக்கிமவுஸின் ஸ்டீம்போட் வில்லி 1998ம் ஆண்டு தான் அமெரிக்க தேசிய திரைப்பட போர்டில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.