திருச்சியில் விடிய விடிய வியாபாரத்துக்கு அனுமதிக்க கோவிந்தராஜுலு கோரிக்கை
திருச்சியில் விடிய விடிய வியாபாரத்துக்கு அனுமதிக்க கோவிந்தராஜுலு கோரிக்கை
தீபாவளி முதல்நாளில் திருச்சியில் விடிய விடிய
பொருட்கள் விற்பனைக்கு அனுமதியளிக்க வேண்டும்
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்
தீபாவளி பண்டிகையை ஒட்டி, திருச்சியில் ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் விடிய விடிய விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமே வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ. கோவிந்தராஜுலு தெரிவித்திருப்பது :
தீபாவளி பண்டிகையை ஒட்டி, புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் திருச்சியில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக, தீபாவளி முதல்நாளன்று பகலில் தொடங்கும் வியாபாரம் மறுநாள் (தீபாவளியன்று) காலை வரையில் நீடிக்கும். இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தீபாவளி முதல்நாளில் திருச்சி வந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர்.
நிகழாண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஏற்கெனவே, வணிகர்கள் வியாபாரமின்றி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மாநில அரசு வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிப்படியாக பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவித்து, அண்மைக்காலமாகவே, சற்று வியாபாரம் நடைபெறும் சூழல் உள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதி சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து தீபாவளி விற்பனையும் சூடு பிடித்துள்ளது. ஆனால், கரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு, தீபாவளி விற்பனையை குறுகிய நேரத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட, மாநகராட்சி மற்றும் காவல் துறை உள்ளிட்ட நிர்வாகத்தினர், தடையேதுமின்றி, திருச்சியில் தீபாவளி முதல் நாள் வியாபாரத்தை விடிய விடிய நடத்திடவும், தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டா வழி செய்யவும், தேவையான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
காந்திச்சந்தையை திறக்க நவ. 26 வரை தடை நீட்டிப்பு :
திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதனை திறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு காந்திச்சந்தையை திறக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில், நவம்பர் 26 ஆம் தேதி வரையில், காந்தி மார்க்கெட்டை திறக்க கூடாது என தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் நடைபெறவுள்ள விசாரணையின் போது, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில், காந்திச்சந்தை மற்றும் மணிகண்டம் புதிய வணிக வளாகம் ஆகியவற்றில் நடைபெறும் வியாபாரங்கள் குறித்து காட்சிகள், மற்றும் படங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஒப்பிடவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.