தீபாவளியன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி
தீபாவளியன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி
தீபாவளி என்றாலே நினைவில் வருவது புத்தாடைகள்,பட்டாசுகள் தான். சிறுவர்கள் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடிக்கத் தொடங்கி விடுவார்கள். தீபாவளி முடிந்த பின்னரும்கூட நம் காதுகளில் டமால் டுமீல் என பட்ட்டாசு சத்தம் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கும். அந்தளவிற்கு பட்டாசுகளால் தீபாவளி கோலாகலமாக இருக்கும்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினாலும், பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு படுவதும் தவிர்க்க இயலாதது ஒன்று. இதற்கிடையே, பட்டாசு வெடிப்பதற்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பொது நல வழக்குகள் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கவும், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது.
கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் போல் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.