திமுகவில் பாராமுகம் காட்டுவதால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகவும் இருந்து வலுவாக கோலோச்சியவர். திமுகவை கைப்பற்ற திரைமறைவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கருணாநிதி காலத்தில் கட்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். மு.க.அழகிரியை பொறுத்தவரை தென் தமிழகத்தை தன் பிடியில் வைத்துள்ளார். மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக வலம் வந்திருக்கிறார். சில பிரச்சனைகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்னும் அவருக்கு மவுசு குறையாமல் உள்ளது
ஆனாலும் எத்தனையோ வழிகளில் திமுகவில் இணைய முயன்றும் முடியாததால் விரக்தியில் இருந்து வந்தார். தனக்கு கூட பதவி வேண்டாம். எனது மகன் தாயாநிதி அழகிரிக்கு கொடுத்தால் போதும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. நம் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ரஜினி, பாஜக கட்சிக்கு சென்று விடக்கூடாது என கருதிய மு.க.ஸ்டாலின் தயாநிதி அழகிரியை திமுகவில் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால், சமீபத்தில், கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்ற மு.க. அழகிரியை பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அரசியல் குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மு.க.அழகிரி மகனுக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையும் பாஜக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாவும், தயாநிதி அழகிரிக்கு தென் மண்டல பொறுப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மு.க.அழகிரி மகிழ்ச்சியும், மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.