கட்டண பிரச்சினை முடிவாகும் வரை புதிய திரைப்படங்களை திரையிட முடியாது
கட்டண பிரச்சினை முடிவாகும் வரை புதிய திரைப்படங்களை திரையிட முடியாது
வி.பி.எஃப் கட்டணப் பிரச்னை குறித்து முடிவெடுக்கும் வரை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்கள் வெளியாகாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளா்வுகளுக்கு பின்பு இம் மாதம் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களைத் திறக்க அனுமதியளிக்கப்படாமல் இருந்தது
தமிழக அரசு நவம்பா் மாதத்தில் தளா்வுகளை அதிகரித்துள்ள நிலையில், இம் மாதம் 10-ஆம் தேதிமுதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது. ஆனால், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து திரையரங்குகளைத் தயாா்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திரையரங்குகளின் இருக்கைகள், வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப அறைகளிலும் பராமரிப்புப் பணிகளை ஊழியா்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வி.பி.எஃப். கட்டணப் பிரச்னை குறித்து முடிவெடுக்கும் வரை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியவுடன் வி.பி.எஃப். கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் டிஜிடல் புரொஜக்சன் நிறுவனங்களுக்கும் முறையாகக் கடிதம் அனுப்பி, வி.பி.எஃப். என்கிற வாராவாரம் கட்டணத்தை இனிமேல் கொடுக்க முடியாது, ஒருமுறைக் கட்டணம் மட்டுமே தரமுடியும் என்று தெரிவித்து இருந்தோம். திரையரங்கில் உள்ள புரொஜக்டர் சம்பந்தப்பட்ட லீஸ் தொகையைத் திரையரங்குகள் தான் கட்ட வேண்டும், தயாரிப்பாளர்கள் அல்ல என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். இதற்கு ஒப்புகொள்ளவில்லையென்றால் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால் எங்கள் கோரிக்கைகுச் செவி சாய்க்காமல் விபிஎஃப் கட்டணத்தைத் தொடர்ந்து வாங்குவோம் என்று எங்களுக்குத் தெரிவித்து உள்ளார்கள். இதனால் வி.பி.எஃப். கட்டணத்துக்கு ஒரு முடிவு வரும் வரை புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பாரதிராஜா இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக க்யூப், யூஎஃப்ஓ-க்கான வி.பி.எஃப். கட்டணத்தைத் தயாரிப்பாளா்களாகிய நாங்கள் செலுத்தி வந்துள்ளோம். இதற்கு புரொஜக்டா் முதலீட்டுக்கும் அதிகமான தொகை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே க்யூப், யூஎஃப்ஓ-க்கான வி.பி.எஃப் கட்டணத்தை இனி திரைப்படத் தயாரிப்பாளா்களாகிய எங்களால் செலுத்த முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல கோடி ரூபாய் செலவு செய்து படமெடுத்து அதற்கு ஒரு கோடி, இரண்டு கோடி என்று விளம்பரம் செய்து ரசிகா்களைத் திரையரங்குகளுக்கு வரவைத்து படம் பாா்க்க வைக்கும் தயாரிப்பாளா்களுக்குத் திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் எந்தப் பங்கும் இல்லை. அது டிஜிட்டல் கம்பெனிகளுக்கும் மற்றும் திரையரங்கு உரிமையாளா்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் வரும் தொகையில், தயாரிப்பாளா்களுக்கு ஒரு பகுதி தரப்பட வேண்டும். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை திடீரென நிறுத்துவதும், நல்ல தரமான படங்களுக்கு வாய்ப்பளிக்காமல் மறுக்கப்படுவதும் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. எனவே, படங்களுக்கு சரியான கால அவகாசம் தரப்பட வேண்டும். அரசாங்கத்தின் அனுமதியோடு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளா்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளா்கள் மத்தியில் நாங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால், எங்களால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என்றார்.