
தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நீலமேகம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திரதினம் ‘ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்’ என்ற பெயரில் (சுதந்திர தின அமுத பெருவிழா) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மத்திய அரசு ‘ஹர் கார் திரங்கா’ (வீடுதோறும் மூவர்ணக்கொடி) என்ற இயக்கத்தை அறிவித்தது.
இதன்படி ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதிவரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசியக்கொடிக்கும், பாலியஸ்டர் தேசியக்கொடிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. இப்போது இதிலும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தேசியக்கொடி கைகளால் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது எந்திரத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அது பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு காதி ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கலாம். என மத்திய அரசு அறிவித்துள்ளார்கள்
தமிழக முதல்வரும் வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றலாம் என அறிவித்துள்ளார்.
01. 08.22 செய்தி தாளில் சிவகாசியில் துணி கொடி, காகித அட்டை,பிளாஸ்டிக் கொடி, ஸ்டிரா தேசியக் கொடி என பல்வேறு வடிவங்களில் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு வருகிறது என செய்தி தாளில் பார்த்தேன் .
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கொடி தயாரிக்க கூடாது எனவும், கடைகளில் விற்கவும் , பொது மக்கள் வாங்கவும் தடை செய்ய வேண்டும் என தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியத் திருநாட்டின் தேசியக் கொடி, விடுதலை நாளன்றும் (ஆகஸ்ட் 15), குடியரசுத் திருநாளன்றும் (ஜனவரி 26) அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு, ஏற்றப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் கொடிகளின் வருகை அதிகரித்திருக்கிறது.
கம்பங்களில் ஏற்றப்படும் கொடிகளைத் தவிர்த்து, கைகளில் வைத்துக் கொள்வதாகட்டும், வண்டிகளில் பொருத்துவதாகட்டும், தோரணங்களாக கட்டுவதாகட்டும் கோடிக்கணக்கான பிளாஸ்டிக் கொடிகள் அந்தச் சிறப்பு நாட்களில் மட்டும் வெளியாகின்றன. அவையனைத்தும் நிகழ்ச்சி முடிந்தவுடன் குப்பையாக வீசப்படுபவையே.
இந்தப் பிளாஸ்டிக் கொடிகள் சாதாரண குப்பைகளோடு சேர்ந்து மக்கச் செய்யாமல் தடுக்கின்றன. மண்ணுக்குள் புதைந்து ரசாயனங்கள் மண்ணில் கலந்து நுண்ணுயிரிகளுக்கு கேடுவிளைவிக்கின்றன. நீர்நிலைகளில் கலந்து தண்ணீரின் தூய்மைக்குக் கேடு விளைவிக்கின்றன. பல ஆண்டுகள் மக்காமல் இருப்பதால் இயற்கை சுழற்சிக்குத் தடையாக இருக்கின்றன.
நாட்டின் சில மாநிலங்களில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் கூட பிளாஸ்டிக் கொடிகளைத் தடை செய்வது என அறிவித்துள்ளது..
எனவே, நாட்டின் முன்மாதிரி மாநிலமாக, தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை விதித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதுதொடர்பான அரசின் அவசர, அவசிய அரசாணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
என நீலவகம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

