Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதம் மாற வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் வாக்குமூலம்,இன்று ஐகோர்ட்டில் ஒப்படைப்பு.

0

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா தற்போது பிளஸ்-2 படித்து வந்தார். இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, விடுதியில் அறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அடிக்கடி வேலை வாங்கியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர்.

இந்தநிலையில் மாணவியை மதம் மாற கூறி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தந்தை மற்றும் பா.ஜனதா கட்சியினர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே மாஜிஸ்திரேட்டிடமும், போலீசாரிடமும் மாணவியின் வாக்குமூலத்தில் மதம் மாற்றம் தொடர்பான தகவல் இல்லை என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியை மதம் மாற கூறி பள்ளியின் ஆசிரியர்கள் 2 பேர் கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் மதுரை ஐகோர்டடில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் விசாரணை செய்து, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். மாணவியின் தந்தையும், தாயாரும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜராகி, அவர்களுடைய மகள் தெரிவித்த தகவல் குறித்தும், மாணவியின் இறப்பு குறித்தும் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

இதைத்தொடர்ந்து லாவண்யாவின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அங்கு லாவண்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு வந்தனர்.

பின்னர் நீதிபதி பாரதி முன்பு மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் நேற்று காலை 11.55 மணிக்கு ஆஜரானார்கள்.

மாணவியின் தந்தையும், சித்தியும் தனித்தனியாக மதியம் 2.30 மணி வரை வாக்குமூலம் அளித்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோ பதிவு மூடி சீலிடப்பட்ட கவரில் வைக்கப்பட்டு மதுரை ஐகோர்ட்டில் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.