சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் ‘வெர்ச்சுவல் க்யூ’ முலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி செய்யப்பட்டு அதன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் ‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ‘ஸ்பாட் புக்கிங்’ மையம் மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சபரிமலையின் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலம் 60 நாட்கள் என கணக்கிட்டு அதை நான்காகப் பிரித்து நான்கு பேட்ச் ஆக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் மூன்றாவது ‘பேட்ச்’ போலீஸ் பிரிவினர் தற்போது பொறுப்பேற்றுள்ளனர்.
சன்னிதானத்தில் மூன்றாவது பேட்ச் பணிக்காக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய, 48 மணி நேரத்திற்கு முந்தைய ஆர்டி-பிசிஆர். கொரோனா நெகட்டிவ் சான்று பெற்ற 265 போலீசார் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் தங்கள் பணியைத் துவக்கியுள்ளனர்.
அதோடு 3 டிஎஸ்பிகள், 33 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர்.
அதற்கு முன்பாக புதிய மூன்றாவது பேட்ச் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கும் கூட்டம் சபரிமலை சன்னிதானத்தில் நடந்தது. சபரிமலை சன்னிதானம் சிறப்பு போலீஸ் அதிகாரி ஐஜி., ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், உதவி சிறப்பு அதிகாரி பிரகாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய போலீஸ் பிரிவினர் சபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்றவேண்டிய பணிகள், சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. ஐயப்ப பக்தர்களுக்கு எந்த குறையையும் நேராத வண்ணம் பார்த்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.
போலீசார் தவிர கமாண்டோ படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், உளவுப் பிரிவினர், ஆந்திரா மற்றும் தமிழக போலீசார் என இதர 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.
தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும்.
2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.