திருச்சி மாவட்ட வருவாய் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டாக்களை வரும் நவம்பர் மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைநீர் வடிகால் பணிகள், நிவாரண உதவிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார். தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் மீதும் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துணை சபாநாயகர் ரவிசங்கர், மாவட்ட ஆட்சியர் பிரத்தீக் தாயள், முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ,திருச்சி முன்னாள் துணை மேயர் ஜெ..சீனிவாசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்களுக்குப் பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை தொடர்பான குறைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட நலத்திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர் பேசிய அமைச்சர், அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டாக்களை நவம்பருக்குள் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்த 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஏழு அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவையும் முதல்வர் அமைத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகக் கூறினார். இயற்கை இடர்பாடுகளின்போது பொதுமக்களைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், முந்தைய ஆட்சியில் முடிக்கப்படாத பணிகளைத் தங்கள் அரசு விரைவாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஏற்கெனவே இதுகுறித்து விளக்கியுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்த விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்தார். முந்தைய திமுக ஆட்சியில் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாததால், தற்போதைய அரசு விரைந்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அமைச்சர், முதல்வர் விஜய் குறித்து திமுகவினர் அவதூறாகப் பேசுவதாகக் குற்றம்சாட்டினார். அரசியல் நாகரிகத்துடன் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் அரசியலில் வேறுபட்டவர்கள் அல்ல; இருவரும் ஒன்றுதான் என்று விமர்சித்தார். திமுகவினரின் பேச்சுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக ஊக்கமளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார் .

