கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூலை மாதம் கூட வேண்டிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் காலதாமதாக செப்டம்பார் மாதம் கூடியது. அதுவும் 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடரானது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 11 நாட்களிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.
அதன் பிறகு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய குளிர்கால கூட்டத்தொடரும் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
கொரோனா பரவலுக்கு இடையில் நாட்டின் பொருளாதாரம் மிக முக்கியம் என்பதால் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் தடுப்பூசி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்பு உள்ளது.