திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்தாண்டு தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து காலை 6 மணிக்கு உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன் அம்மன் எழுந்தருளினார். காலை 7.30 மணிக்கு கொடி மரத்தில் அம்மனின் திருஉருவப்படம் வரையப்பட்ட கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடி மரத்துக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர் உறுப்பினர்கள் சுகந்தி, லட்சுமணன், பிச்சைமணி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்றிரவு மர கேடயத்தில் அம்மன் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி தினமும் காலை பல்லக்கிலும், இரவு பூத வாகனம், மர அன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வரும் 30ம் தேதி வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் காட்சியளிக்கிறார். 31ம் தேதி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவிரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பிப்ரவரி 2ம் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் அம்மன் வழிநடை உபயம் கண்டருளி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு அம்மனுக்கு அபிஷேகம் அனைவரும் .
பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. அன்று நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

