தஞ்சை:நாங்கள் போலீஸ் என கூறி ரூ.44.59 லட்சம் பணத்தை பறித்து சென்ற இருவர்,உடந்தையாக இருந்து 4 பேர் உள்ளிட்ட 6 பேர் கைது.
தஞ்சாவூர் அருகே ரூ.44.59 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர்.
தஞ்சாவூர் அருகே அடகுகடையை சேர்ந்தவர்களை பஸ்சிலிருந்து இறக்கி ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது36). இவரது பார்ட்னர் ரமேஷ். இவர்கள் இருவரும், மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளனர்.
கடந்த டிச.8ம் தேதி, ரமேஷ், தன் தம்பி அர்ஜூன் (வயது 19), மற்றும் கடையில் வேலை பார்க்கும் பிரதீபன் (வயது 22) ஆகியோரை காரில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தார். பின்னர் தஞ்சாவூரில் நகை விற்பனை செய்த பணம் ரூ. 44.59 லட்சத்தை வாங்கிக் கொண்டு அர்ஜூன் மற்றும் பிரதீபன் ஆகியோர், மன்னார்குடிக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டனர்.
பஸ் வாண்டையார் இருப்பு நிறுத்தத்தில் நின்ற போது, அதே பஸ்சில் பயணம் செய்த ஒருவர், அர்ஜூன், பிரதீபனிடம் தன்னை போலீஸ் என்று கூறி உங்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்து இருவரையும் பஸ்சிலிருந்து இறக்கியுள்ளார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மற்றொரு நபர் தன்னையும் போலீஸ் என கூறி, அர்ஜூன், பிரதீபன் இருவரையும் மிரட்டி, அவர்கள் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கார்த்தி தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் கடை ஊழியர் பிரதீபனுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரதீபன் தனது மாமா ரஞ்சித் மூலம் பணத்தை திருட திட்டம் தீட்டியுள்ளார் என்பதும், ரஞ்சித் தனது நண்பர் கோபியுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
மேலும் ரஞ்சித் மற்றும் கோபி இருவரும் திருச்சிக்கு தப்பிச் செல்ல பாபநாசம் அருகே உடையார்கோவில் பகுதியை சேர்ந்த குமார் (வயது 39), சாலியமங்கலம் முகமது தௌபிக் (வயது 37), கூத்தாநல்லுார் பகுதியை சேர்ந்த ராசாத்தி (வயது 30) ஆகியோர் தப்பி செல்ல உதவியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து பிரதீபன், குமார், முகமது தௌபிக், ராசாத்தி நான்கு பேரையும் தாலுகா போலீசார் கடந்த டிச.12ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் பணத்துடன் தலைமறைவாக ரஞ்சித், கோபி இருவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமறைவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியை கோபி (வயது 32) போலீசாரிடம் சரண் அடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லுார் பகுதியை சேர்ந்த ரஞ்சித்(வயது 36) கோவையில் இருந்ததை அறிந்த தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரஞ்சித்திடம் இருந்து ரூ.37 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

