திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளைப் பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துகளைப் பெற 4 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 404 ஊராட்சிகள் உள்ளன. இதில், 4 ஊராட்சிகளை 8 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மணப்பாறை ஒன்றியம், புத்தாநத்தம் ஊராட்சியானது புத்தாநத்தம், இடையப்பட்டி எனவும், கண்ணுடையான்பட்டி ஊராட்சியானது கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி என 2 ஆகவும் பிரிக்கப்படுகிறது. திருவெறும்பூா் ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியானது, கிருஷ்ணசமுத்திரம், செம்மங்குளம் என 2 ஆக பிரிக்கப்படுகிறது.
மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூா் ஊராட்சியானது, ஆலம்பட்டிபுதூா், இனாம்குளத்தூா் என 2 ஆக பிரிக்கப்படுகிறது. இந்த ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் 
திருச்சி மாவட்ட அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தொிவிக்க விரும்பினால் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வரும் எவாிடமிருந்தும் மேலே கூறப்படும் காலக்கெடுவிற்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால் அதனை உரிய பாிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்
என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

