பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சாலை மறியலால் பரபரப்பு.
20 பெண்கள் உள்பட 75 பேர் கைது .
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.
கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய நிலுவைத் தொகையையும், முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்களுக்கும் காலம் முறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
காலிப்பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் 25 விழுக்காடு வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை தற்போதைய அரசு 5% என குறைக்கப்பட்ட அரசாணை 33 யை ரத்து செய்து விட்டு, மீண்டும் 25 விழுக்காடு வழங்கிட வேண்டும்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணி பளுவினை குறைக்க வேண்டும். அலுவலக பணி நேரத்திற்கு பின்பும், அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களை தவிர்த்திட வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலமாக, சத்துண ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை முழுமையாக அரசு ஏற்று நடத்த வேண்டும். அதுவரையில் இத்திட்டத்தில் உள்ள முறையீடுகளை யுனைட்டடு இந்திய நிறுவனம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட வேண்டும்.
மருத்துவத்துறை, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தனியார் முகமை நியமனங்களை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், அல்போன்சா, செந்தில்குமார், இணைச் செயலாளர்கள் கோபாலன், வெங்கடேச பாபு, சண்முகம், பெரியசாமி, மாநில துணைக் குழு அமைப்பாளர் கலையரசி, மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் நவநீதன் சி.ஐ .டி .யு மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு துறை ஓய்வூதிய சங்க மாநில பொருளாளர் செந்தமிழ் செல்வன் மற்றும் திரளான நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளை திமுக தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முழக்கம் எழுப்பினார்கள்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்து கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அரசு ஊழியர்களின் திடீர் மறியல் போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .

