விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் (3வது அலை)மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவர்கள் எச்சரிக்கை
டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் குறைந்துள்ளது.
இதனால் மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சந்தைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நெருக்கமாக கூடி வரத்தொடங்கி உள்ளனர். ஆனால், மக்கள் கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 2-வது அலையை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மூத்த டாக்டர் சுரன்ஜித் சாட்டர்ஜி கூறும்போது, “கொரோனா கால பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால், மீறல்கள் ஏற்பட்டால், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தாவிட்டால் எங்களுக்கு மீண்டும் பிரச்சினைதான்” என குறிப்பிட்டார்.
மேலும் “மக்கள் முக கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல், சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவோர் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை என்றால், நிச்சயமாக பிரச்சினை ஏற்படும். இரண்டாவது அலையை விட மோசமான நிலை ஏற்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘டெல்டா பிளஸ்’ உருமாற்ற கொரோனா வைரஸ் 3ஆவது அலைக்கு அடித்தளமிடுமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
வேகமாக பரவி வரும் இது, தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் 2ஆவது அலை வெகுவாக குறைந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் 3ஆவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம், ஏஒய்.1 எனப்படும் இந்த புதிய உருமாற்ற வகை கொரோனா வைரசை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த வைரசின் ஸ்பைக் புரதம் கே417என் என்ற உருமாற்ற வகையை சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பைக் புரதம், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாண்டி பாதிக்கக் கூடியது என கூறப்படுகின்றது.
இதனால், தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால்,
தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.