கால்நடைகள் , கோழித்தீவனம் தயாரிக்க கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய
திருச்சியில் 1400 கிலோ
ரேசன் அரிசி
பதுக்கி வைத்தவர் கைது.
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். வின்சென்ட் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸார் ரேசன் அரிசி மற்றும் உணவு பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருச்சி அரியமங்கலம், திடீர்நகர், அம்மாக்குளம், காமராஜ் நகர், அம்பிகாபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து மேற்கொண்ட போது, ஜோதிநகர் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு அ. அக்பர்பாஷா (வயது45) என்ற நபர் ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததும், மேலும் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கால்நடைகள் மற்றும் கோழித்தீவனம் தயாரிக்க கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் 28 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1400 கிலோ ரேசன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, அக்பர் பாஷாவையும் கைது செய்தனர்.