சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லலாம் எனும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ‘பாஸ்ட் டேக்’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய அனைத்து வாகனங்களும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவினை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கோடு வரையப்படும்.
இக்கோட்டினை தாண்டி வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தால் அந்த குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம்.
சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 வினாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்க கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.
இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.