Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேங்கை வயல் சம்பவம் போன்று திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசி சென்ற மர்ம நபர்கள்.

0

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

நேற்று மாலை 7 மணி அளவில் ‘இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது பாலித்தின் பையில் சுற்றப்பட்ட மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது.

இந்த தகவல் அறிந்த 20வது வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர். இதுவரை அதில் தண்ணீர் ஏற்றப்படாமல் தொட்டி காய வைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை வீசிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கஞ்சா போதையில் திரியும் கருவாட்டுப்பேட்டை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த சில வாலிபர்கள்   தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வேங்கை வயல் கிராமத்தில் நடந்தது போன்ற சம்பவம் திருச்சி மாநகர பகுதியில் நடைபெற்று இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

Leave A Reply

Your email address will not be published.