திருச்சி:நாமக்கல்லைச் சேர்ந்தவர் தேவராஜன், 50. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம், சுப்பிரமணியபுரம் பகுதியில் குடியிருக்கிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் கோவிலில் பணியாற்றுபவரும், பா .ஜ., மாநில விவசாய அணி துணைத்தலைவருமான கோவிந்தன், (வயது 56), என்பவர், தேவராஜனுடன் அறிமுகமானார். அவரிடம் தேவராஜன், ஸ்ரீரங்கம் பகுதியில் அநாதை ஆசிரமம் கட்ட நிலம் தேவைப்படுவதாக கூறினார். அதை கேட்ட கோவிந்தன், சில நாட்களுக்கு முன், தேவராஜன் வீட்டுக்கு அருகில் உள்ள, 17 ஏக்கர் தென்னந்தோப்பை காட்டி, தன் அக்கா கணவர் ரங்கசாமிக்கு சொந்தமானது என்று கூறி, அதற்கான விற்பனை அதிகாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.முதற்கட்டமாக, 19 கோடி ரூபாய் விலை பேசி, 4.68 கோடி ரூபாயை முன்பணமாக தேவராஜன், வங்கிகள் மூலம் அனுப்பினார். அதை கோவிந்தனும், அவரது மனைவி கீதாவும், ( 52,) பெற்றனர்.
இந்நிலையில் நிலத்தை முழுமையாக தனக்கு எழுதித்தர ரெங்கசாமியை அணுகி தேவராஜன் கேட்டார். அப்போது தான், கோவிந்தனுக்கும், ரெங்கசாமிக்கும் சம்பந்தம் இல்லை. நிலம் அவருடையது என்பதை அறிந்தார் தேவராஜன். இதுகுறித்து கோவிந்தனிடம் இதுகுறித்து கேட்டபோது, முன்பணமாக வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும், போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் பணத்தை கோவிந்தன் திருப்பித் தரவில்லை. இதையடுத்து கோவிந்தன் தன்னை மோசடி செய்தது குறித்து, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில், தேவராஜன் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் கோவிந்தனையும், அவரது மனைவி கீதாவையும் நேற்று கைது செய்தனர்.
இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் வாசு, சேகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.