Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய அதே நகராட்சியில் மகள் ஆணையராக பொறுப்பு ஏற்றுள்ளார்

0

 

 

தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில், அவரது மகள் நகராட்சி ஆணையராகியுள்ளார். பெண் ஒருவர் கல்வியால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

இப்படி, பெற்றோர் பட்ட அவமானத்தை தாங்கிக் கொண்டு, படிப்பு எனும் ஆயுதத்தை ஏந்தி, தனது தந்தை துய்மை பணியாளராக பணியாற்றிய அதே நகராட்சியில் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா.

மன்னார்குடியை சேர்ந்த சேகர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். 6 மாதத்திற்கு முன்பு விபத்தில் அவர் இறந்துவிட்டார். பணியின் போது, சேகர் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் தீ ஜூவாலையாய், அவரது மகளான துர்காவின் மனதில் எரியத் தொடங்கியது. சிறுவயதில் இருந்தே, தான் ஒரு அரசு அதிகாரியாக வேண்டும் என்று எண்ணினார் துர்கா.

மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை வரை படித்த துர்கா, குடும்ப சூழலால், கடந்த 2015 ஆம் ஆண்டு மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது, தனது கனவு நிர்மூலமாகிவிட்டதாக வருந்தினார்.

ஆனால், நடந்ததோ வேறு, தனது மனைவியின் அரசு வேலை கனவை அறிந்த அவரது கணவர் நிர்மல்குமார், அதற்காக ஊக்கமளித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வில் தோல்வியடைந்த துர்காவுக்கு, அடுத்தடுத்து நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும் தோல்வியே கிடைத்தது.

எனினும், விடா முயற்சியுடன் கூடுதல் உழைப்புடன் 2022 இல் குரூப் 2 தேர்வு எழுதிய துர்கா, வெற்றியை வசப்படுத்தி, தற்போது நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

தாம் அரசு பணியில் சேர முடியாததை, தனது மனைவி நிறைவேற்றிவிட்டதாக துர்காவின் கணவர் நிர்மல்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளாத தனக்கு, மகளுக்கு கிடைத்த அரசுப் பணி சற்று ஆறுதல் அளிப்பதாக துர்காவின் தாயார் கூறினார்.

நகராட்சி ஆணையாளரான தனது பணியை காண, கடைசி வரை கஷ்டப்பட்ட தனது தந்தை இல்லை என வருத்தம் தெரிவித்தார். எளிய நிலையில் இருந்து வந்ததால், மக்களின் கஷ்டங்களை அறிந்து சிறப்பாக பணியாற்ற முடியும் என துர்கா நம்பிக்கை தெரிவிதார்.

Leave A Reply

Your email address will not be published.