பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி கலெக்டர் .
திருச்சி மாவட்டம் , தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் வாழும் மக்கள் இயற்கை மரணம் அடைந்து விட்டால், இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவரின் சான்றிதழுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவரை அணுகுவர்.
அதன்படி, நேற்று மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஒருவர் இறந்துவிட்ட நிலையில், அவரது உறவினர்கள் பணியில் இருந்த அரசு மருத்துவர் ராமச்சந்திரனை அணுகி இறந்து போனவரின் இறப்புக்கு சான்றிதழ் பெற, மருத்துவ சான்றிதழ் வழங்குமாறு கேட்டனர்.
அதற்கு மருத்துவர் ராமச்சந்திரன் இறந்தவர் எப்படி இறந்தார். ரூ.1000 கொடுத்தால் மட்டுமே இறப்பு சான்றிதழ் வழங்க முடியும். நான் இங்கு சான்றிதழ் வழங்குவதற்காக பணியாற்றவில்லை. அது எனது வேலை இல்லை என்று ஆவேசமாக பேசினார்.
மேலும், நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள் என கறாராக பேசுவதுடன், பணம் தராவிட்டால் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் மரணம் இயற்கையானது என்று எழுதி வாங்கி வாருங்கள். அல்லது இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே நான் இறப்புச் சான்றிதழ் பெற சான்று வழங்க முடியும் என்று பேசினார்.
இதை உடன் சென்ற உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். இறப்பு சான்றிதழ் வழங்க அரசு மருத்துவர் பணம் கேட்டு அடாவடியாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி ரோட்டரி சங்கம் மற்றும் ஹேக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போதை பழக்கத்திற்கு எதிரான ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:-
திருச்சி மாவட்டத்தில் இறப்பு சான்றிதழ் வழங்க அரசு அதிகாரி ரூபாய் 1000 அடாவடியாக கேட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அரசு அதிகாரி ஒருவர் பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணம் கேட்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அது என்னவென்றால் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் குறைகளை கோரிக்கைகளை அளிக்க வருகின்றனர். இப்படி வரும் பொது மக்களை உட்கார வைத்து அவர்களிடம் அன்பாக பேசி அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து புரிந்து செயல்பட வேண்டும்.
மாறாக மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள் அரசு அலுவலர்களாகிய உங்களுக்கும் நிறைய வேலைப்பளுக்கள் இருக்கும். ஆனால் வருகின்ற பொது மக்களிடம் அவர்களுக்கு உண்டான பதிலை நாம் தெளிவாக சொல்ல வேண்டும்.
இதன் மூலம் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்வது . பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். மேலும் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.