Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சுட்டெரிக்கும் வெயிலில் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளின் மனதை குளிர்வித்த மாணவி சுகிதா . தொடர்ந்து ஏழை, எளியோருக்கு உதவி வரும் குணத்தை பாராட்டும் பொதுமக்கள்.

0

 

வெயில் உக்கிரமாய் எரிந்து, உடலில் உள்ள அத்தனை நீரையும் உறிஞ்சி ஆவியாக்க, களைத்து நிழலைத் தேடும் மானுடர்கள் இங்கு ஏராளம். மழை பெய்தால் ஏன் தொடர்ந்து பெய்கிறது என கரித்துக் கொட்டியவர்கள் கூட, தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு அனலாய் சாலைகளில் வெப்ப காற்று வீசுவதால், நிழலை விட்டு விலக மனமின்றி மழையை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர்.

திருச்சியில் 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ள நிலையில், தங்கள் வயிற்று பிழைப்புக்காக சுட்டெரிக்கும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல், சாலையோரங்களில் அமர்ந்து தொழில் நடத்தி வரும் சாலையோர ஏழை சிறு வியாபாரிகள். இந்நிலையில், இந்த சாலையோர ஏழை வியாபாரிகளுக்கு குடை தந்து, விசிறி தந்து கோடை வெப்பத்தை தணிக்க உதவியுள்ளார், 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ள பள்ளி மாணவி சுகித்தா.

சிலம்பத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியும், தொடர் சமூக சேவை மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்தும் வரும் சுகித்தாவுக்கு, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான விருது மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கி மாநில அரசு சிறப்பித்துள்ள நிலையில், அதனை பல்வேறு சமூக சேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார், மாணவி.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் மோகன் – பிரபா தம்பதியினரின் மகள் சுகித்தா. இவர் பண்டிகை காலங்களில் புத்தாடை, குளிர்காலத்தில் கம்பளி, போர்வை , ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் வெயில் காலங்களில் காலணி என தான் சேகரித்த பணத்தைக் கொண்டும், பெற்றோர் தரும் தொகை மற்றும் சிலம்பப் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகைகளைக் கொண்டும், தன்னால் முடிந்த உதவிகளை ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருகிறார்.

அந்த வகையில், மாணவி சுகித்தா தனது அண்ணன் சுஜித்துடன் சேர்ந்து உச்சி வெயில் மண்டையை பிளக்கும் நிலையிலும், தனது குடும்ப ஜீவனத்திற்காக திருச்சி மாநகர், குட்செட் பாலம், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, பாலக்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோரம் கூடை வைத்துக் கொண்டும், தார்ப்பாய் விரித்துக் கொண்டும் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளுக்கு உதவியுள்ளார்.

அதாவது சாலையோரங்களில் பூக்கள், வெள்ளரிப்பழம், வாழைப்பழம், நுங்கு, மாம்பழம் மற்றும் கீரை வகைகளை விற்பனை செய்யும் வயதானவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களை கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள உறுதி வாய்ந்த மிகப்பெரிய அளவிலான குடை மற்றும் பனை ஓலை விசிறியை வழங்கி, அவர்களின் மனங்களை குளிர்வித்துள்ளார் .

தற்போது 30 சிறு வியாபாரிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்கிய நிலையில், மேலும் பலருக்கு இந்த உதவி தேவைப்படுவதால், வரும் மாதம் முதல் இரண்டு தினங்களில் மீண்டும் குடைகள் வாங்கி, எஞ்சியவர்களுக்கு வழங்க தயாராக உள்ளாதாக மாணவி சுகித்தா தெரிவித்துள்ளார்.

‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு..’ என்ற நோக்கில், தன்னால் முடிந்த அளவு சேவைகளை ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் புரிந்து வரும் சுகித்தாவின் அர்ப்பணிப்பு சேவை, பலரது மத்தியில் பாராட்டையும், அனைவரும் மனித நேயத்துடன் இதுபோன்ற உதவியினை செய்ய வேண்டும் என்ற உள்ளார்ந்த மனப்பாண்மை வளர்த்த அவரது தந்தை மோகனையும் பலரும் பாராட்டி வருகின்றனர

Leave A Reply

Your email address will not be published.