Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேவை குறைபாடு. திருச்சி பிரபல டூ வீலர் ஏஜென்சி மேலாளருக்கு பிடிவாரண்ட்+ ரூ.2 லட்சம் அபராதம் .

0

'- Advertisement -

 

வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தாத திருச்சி, பிரபல இருசக்கர வாகன ஏஜென்சி மேலாளருக்கு ‘பிடி வாரண்ட்’ பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்லக்குடியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 28). திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு கல்லக்குடியில் பிரபல நிறுவனத்தை சேர்ந்த ‘ஸ்பீடு பைக்’ ஒன்றை புதிதாக வாங்கினார். தொடர்ந்து பணி நிமித்தமாக திருச்சி சுப்ரமணியபுரம் பாரதிதாசன் தெருவில் தங்கி வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022 ல் நடந்த ஒரு சாலை விபத்தில் சிறு காயத்துடன் தப்பினார். இருப்பினும் அவரது இருசக்கர வாகனத்தின் முன்பக்க ‘போர்க்’ வளைந்து போனது. இதை சரி செய்ய, திருச்சி கண்ட்ரோல்மென்ட் பென்வெல்ல்ஸ் சாலையில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன ( ‘பைக் ஷோரூமின்’ ) சர்வீஸ் பிரிவில் பழுது நீக்க்கம் செய்ய விட்டிருந்தார். ஒரு மாதம் கடந்த நிலையிலும் பழுது நீக்கி தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் பெங்களூரில் இருக்கும் டூவீலர் தயாரிப்பு நிறுவனத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகார் செய்ததன் காரணமாக திருச்சி நிறுவனம் அவசர கதியில் சபரிநாதனின் வாகனத்தை பழுது நீக்கி கொடுத்துள்ளனர்.

ஆனால், அதை எடுத்து சென்று ஓட்டியபோது,பழுது நீக்கியதில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருச்சி நிறுவனத்தில் சென்று மீண்டும் கேட்ட போது, 2017ம் ஆண்டு மாடல் வாகனத்துக்கான போர்க் கிடைக்காததால் 2022 மாடல் போர்க் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போக போக சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் ஏதாவது விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதே திருச்சி நிறுவனத்துக்கு சென்று டூவீலர் பழுதை முழுமையாக நீக்கி தரும்படி கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் டூவீலரை பொறுப்பற்ற முறையில் பழுது பார்த்து தந்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்டும், திருச்சியை சேர்ந்த அந்த இருசக்கர வாகன நிறுவனத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நீதிபதி நிர்வாகம், ‘எதிர் மனுதாரர் தொடர்ந்து வழக்கில் ஆஜராகமல் இருந்தால், மனுதாரருக்கு சாதகமாக ‘எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு’ என தீர்ப்பளிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் மனுதாரரான சபரிநாதனுக்கு சாதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மனுதாரருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்திய குற்றத்துக்காக திருச்சி நிறுவனம் சபரிநாதனுக்கு ரூ.2 லட்சமும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், பழுதான டூவீலரை அதற்குரிய உதிரி பாகங்களுடன் பழுது நீக்கி தரவேண்டும் அல்லது தற்போதைய மாடலில் உள்ள ஒரு புதிய டூவீலரை அளிக்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியும் (ஓய்வு), தலைவருமான காந்தி மற்றும் உறுப்பினர்களான சாயீஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பின்னரும் திருச்சி நிறுவனம் தரப்பில் இருந்து எந்த அபராதத்தொகையோ அல்லது பழுது நீக்கம் அல்லது புது வாகனம் மாற்றி கொடுக்கும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. மீண்டும் சபரிநாதன் நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற அமர்வு, பிரபல நிறுவனத்தின் மேலாளரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.