அயன் பட பாணியில் தங்கம் கடத்தி வந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார். ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது.
அதில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அதிகாரிகள் அவரை சோதனை செய்தததில் அவருடைய வயிற்றுக்குள் சிறிய அளவிலான உருண்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, அனுமதி பெறப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தததில் அவருடைய வயிற்றுக்குள் 12 உருண்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த 12 உருண்டைகளை பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பசை வடிவிலான தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உருக்கி தனியாக பிரித்து எடுத்ததில் 306 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரம் .
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாக்கா அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.