மணப்பாறையில்
காதல் தகராறில் வியாபாரி சரமாரி வெட்டி கொலை
தடுக்கச் சென்ற மகனுக்கும் அரிவாள் வெட்டு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65) ஐஸ் வியாபாரி. இவர் இன்று காலை 10 மணி அளவில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு மொபட்டில் பொத்த மேட்டுப்பட்டி கிராமத்துக்குச் சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்களை பின்தொடர்ந்து இன்னொரு மொபட்டில் அவர்களின் மகன் மாரிமுத்து சென்றார்.
இந்த இரண்டு மொபட்டுகளும் குளித்தலை மணப்பாறை சாலையில்
கலிங்கப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் வந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்தது.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குப்புசாமியை சரமாரியாக வெட்டினர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அரிவாளால் வெட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தில் குப்புசாமிக்கு தலையில் பலத்த வெட்டு காயம் விழுந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
வெட்டு காயங்களுடன் வேதனையில் துடித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் துணை போலீஸ் பிரண்டு ராமநாதன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மாரிமுத்துவின் உறவு பெண்ணை ஒருவர் காதலித்த விவகாரத்தில் குப்புசாமி தரப்பினர் அவர்களை ஏற்கனவே தாக்கியதாக கூறப்படுகிறது. ஆகவே இந்த முன் விரோதத்தில் திட்டமிட்டு குப்புசாமியை வெட்டி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பட்டப் பகலில் ஐஸ் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.