திருச்சி அருகே மாமனார் இறந்த துக்கத்தில்
மருமகன் தூக்கிட்டு தற்கொலை
இன்னொரு சம்பவத்தில் மதுவுக்கு அடிமையானவர் சாவு.
திருச்சி லால்குடி திருமங்கலம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 33).
இவர் அதிகம் நேசித்து வந்த அவரது மாமனார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இது விக்னேஷுக்கு மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியது.
இதனால் ஏற்பட்ட கவலையை மறப்பதற்காக விக்னேஷ் மது அருந்த தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையான அவர் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிபோதையில் தனது லுங்கியில் தூக்கில் தொங்கினார். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மனைவி சங்கீதா மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் விக்னேஷ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒரு வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். லால்குடி ரெட்டி மாங்குடி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 36).
இவர் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டது.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து அவரது மனைவி பட்டு கணவரை கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த விஜயகுமார் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார். பின்னர் மயங்கி விழுந்த அவரை மனைவி மீட்டு லால்குடி அரசு மருத்துவமனை சேர்த்தார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.