திருச்சி கலெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு .
திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில்,இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் திருச்சி கலெக்டர் என்ற பெயரில் கணக்கு தொடங்கி அதை நிர்வகித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஆட்சியர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதன் மூலம் அவரது நட்பு வட்டாரம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பணம் கேட்கப்படுதாக தெரிய வந்தது. இது தொடர்பாக வலைதள பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சி நடப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த போலி கணக்கு முடக்கப்பட்டது. மேலும், இது போன்ற மோசடியில் ஈடுபட முயற்சித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இது போன்ற போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2.
திருச்சி ராம்ஜிநகர் அருகே கார் விபத்தில் ஓய்வு பெற்ற
விமான நிலைய அலுவலர் சாவு,
திருச்சியில் சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமான நிலைய அலுவலர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் மிஷ்கின் தெருவை சேர்ந்தவர் பிஷ்கிநாதன்(வயது 60). விமான நிலைய ஆணையக்குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், திண்டுக்கல்லில் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக் (வயது24) என்பவருடன், திருச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கு பெறுவதற்காக நேற்று காலை திருச்சி வந்தார். கூட்டத்தை முடித்துக் கொண்டு மாலை நடைபெற்ற தனது நண்பர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு திண்டுக்கல்லுக்கு காரில் புறப்பட்டார். கார் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜிநகர் சோழ நகர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மண்மேடு மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி நொறுங்கியதில் பலத்தகாயமடைந்த பிஷ்கிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக்கை போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3.
துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், இரு பயணிகளிடமிருந்து ரூ. 55.23 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை, துபையிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், பயணி ஒருவர் கொண்டு வந்த பெட்டியில் கம்பி வடிவிலான 700 கிராம் தங்கத்தை அவர் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 35.23 லட்சமாகும்.
அபோல நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துபையிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை சுங்கதுறையினர் மேற்கொண்ட சோதனையில், பயணியொருவர் 400 கிராம் தங்கத்தை (பசைவடிவில்) தனது காலணிக்குள் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும். மொத்தம் இரவரிடமிருந்தும் 1,100 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 55.23 லட்சமாகும்.