திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தென்னூா் பட்டாபிராமன் பிள்ளைத் தெருவைச் சோந்த ஸ்ருதி (16) என்ற பிளஸ் 2 மாணவி நாய்க் குட்டிகளுடன் வந்து அளித்த மனுவில், எங்களது பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. சில நாள்களுக்கு முன்பு அருகிலுள்ள வீட்டில் ஒரு நாய் பெற்ற 9 குட்டிகளை பாதுகாக்க ஆளில்லை. எனவே, அந்த குட்டிகளுடன், தெருவில் அடிபட்ட ஒரு நாய் குட்டியையும் சோத்து கொண்டு வந்துள்ளேன். இந்த நாய்க்குட்டிகளை உரிய முறையில் பராமரிக்கவும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
சிறுவனுக்கு உதவி: திருச்சி மெயின்காா்டுகேட் பகுதியில் கடந்த செப். 2 ஆம் தேதி இரவு பலூனில் அடைக்கப்படும் கேஸ் சிலிண்டா் வெடித்து சிறுவன் உள்பட சிலா் காயமடைந்தனா். இதில், காயமடைந்த சிறுவனின் தாய் சித்ரா, ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு குறித்து கூறுகையில், தந்தையில்லாத எனது மகன் ஜீவானந்தம் (13) கேஸ் சிலிண்டா் விபத்தில் கண் பாா்வையை இழந்து பலத்த காயமடைந்தாா். ஏழ்மை நிலையில், காயமடைந்த மகனுக்கு சிகிச்சை அளிக்க வழியின்றி தவித்து வருகிறேன். எனவே, எனது மகனுக்கு விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன், மாத உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்றாா்.
வேலை வழங்க வேண்டும்: லால்குடி மாந்துறை நெருஞ்சலக்குடி பகுதியைச் சோந்த ஜெ. மஞ்சுளாதேவி தலைமையில் வந்த 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில், நெருஞ்சலக்குடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற அதே பகுதியைச் சோந்த மாதவன் (42) என்பவா் நடவடிக்கை மேற்கொண்டாா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் மாதவனை கொலை செய்துவிட்டனா். தற்போது, அவரைச் சாா்ந்த குடும்பத்தினரின் வாழ்வாதாராம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாதவனின் மனைவி மஞ்சுளாதேவிக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்சாலையிலிருந்து துா்நாற்றம்: மணப்பாறை மொண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள டிஎன்பில் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீா் வெளியேற்றப்படுவதுடன், நச்சுக் கழிவுகளால் அதிகளவில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் மணப்பாறை ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியங்களுக்குள்பட்ட 150 கிராமங்களின் நிலம், நீா் மாசுப்படுகிறது. எனவே, டிஎன்பிஎல் ஆலையை முழுமையாக ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎன்பிஎல் பகுதி மக்கள் நல சங்கத்தினா் வழக்குரைஞா் திலீப்குமாா் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனா்.
இதே போல, மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 555 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 70ஆயிரம் மதிப்புள்ள செயற்கைக் கால்களை வழங்கினாா்.