திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தின விழாவை கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற்று கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களை ஆட்சியர் முன் அனுமதி பெற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருச்சி மாவட்டத்தில் நாளை மறுநாள் அன்று தேவாலயங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் தின விழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும், அவ்வாறு நடத்தப்படும் திறந்த வெளி நிகழ்ச்சிகளில் 50% அளவிற்கு மிகாமல் சமூக இடைவெளி கடைபிடித்து நடத்த வேண்டும் என தேவாலய பாதிரியார்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுமதி பெறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.