Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 26 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை.

0

'- Advertisement -

திருச்சி அருகே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ள நிலையில், இப்போது கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு, பெண் குழந்தைகளை தீண்டும் காமுகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

திருமண ஆசை காட்டி ஏமாற்றிய கட்டிடத் தொழிலாளிக்குக் கிடைத்துள்ள இந்த உச்சகட்டத் தண்டனை என்ன தெரியுமா?

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்.. 26 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய அஜித்குமார், அச்சிறுமியை பாலியல் ரீதியாகவும் மெல்ல துன்புறுத்த துவங்கினார்.

நாளுக்கு நாள் இந்த வன்கொடுமை அதிகரிக்கவும் ஆரம்பித்தது. இந்தத் தொடர் அத்துமீறலால் அந்த 17 வயது சிறுமி எதிர்பாராத விதமாக கர்ப்பமடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2021-ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தபோது ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். உடனடியாகக் கைது செய்யப்பட்ட அஜித்குமார் நீதிமன்றக் காவலில் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். ஜெயந்தி முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையையும், அதற்கு ஆதாரமான மருத்துவ அறிக்கைகளையும், சாட்சிகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வாதிட்டார்.

17 வயது சிறுமியின் வாழ்க்கையைச் சீரழித்த அஜித்குமாருக்கு சட்டத்தின்படி மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.. அனைத்துத் தரப்பு வாதங்களையும், சாட்சிகளையும் விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஆர். ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட கட்டிடத் தொழிலாளி அஜித்குமார் மீதான புகார்கள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் அதிரடியான தீர்ப்பை தற்போது நீதிபதி வழங்கி உள்ளார்.

நீதிபதி தனது தீர்ப்பில், 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அஜித்குமாருக்கு ஆயுள் கால சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஒருவேளை இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், கூடுதலாக ஒரு வருட காலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டார்.. அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அஜித்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பெண் குழந்தைகளைச் சீண்டும் காமுகர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும், பாடமாகவும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.