திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் – தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா வரும் 19-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் நேற்று திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:-
திருச்சி என்.ஐ.டி.யில் 22-ஆவது ஆண்டாக ப்ரக்யான் எனும் தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் என்எல்சி நிறுவனத்தின் தலைவா் எம். பிரசன்னகுமாா் பங்கேற்கிறாா்.
நிகழாண்டு விழாவானது சுகாதாரம் மற்றும் விளையாட்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் திறன் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தும்.
விழாவில், ரோபோரெக்ஸ், பண்டோராஸ் பாக்ஸ், பிக்சலெட், மேனிக்மா, பைட்ஹாக், ப்ரோனெசிஸ் ஆகிய 7 நிகழ்வுகள் நடத்தப்படும். பயிலரங்குகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்களின் சொற்பொழிவுகள், தொழில்நுட்பக் கண்காட்சிகள், திறந்தவெளி காட்சிப்படுத்துதல், குழு விவாதம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவற்றில் நேரடியாகவும், இணையம் வழியாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

இந்த விழாவானது, நடைமுறை, சா்வதேச நிகழ்கால சிக்கல்களை தீா்க்கும் முறையுடன், கல்வி கற்றலையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றனா்.

