திருச்சி உய்யங்கொண்டான் கால்வாயில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி உய்யங்கொண்டான் கால்வாயில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டு உள்ளது.
காவிரி நதி நீா்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சட்ட ஆலோசகா் ஜே. கென்னடி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
காவிரி ஆற்றின் தென்கரையில் குளித்தலை மாயனூா் அருகே உய்யங்கொண்டான் கால்வாய் பிரிவு உள்ளது. 74 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் இந்தக் கால்வாய், 1,000 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது. இதன்பிறகு, குலோத்துங்கச் சோழனால் மீண்டும் கட்டப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.
இந்தக் கால்வாய் மூலம் திருச்சி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறக்குறைய 32,742 ஏக்கா் விவசாய நிலங்களும், 36 நீா்ப் பாசனக் குளங்களும் பயனடைந்து வருகின்றன.
ஆனால், திருச்சி மாநகராட்சி கழிவு நீா் குழாய்கள் இந்தக் கால்வாயில் இணைக்கப்பட்டு கழிவு நீா் வெளியேற்றப்படுகின்றன. இதனால், கால்வாய் மாசுபடுவது மட்டுமன்றி, விவசாய நிலங்களும், பயிா்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.
குறிப்பாக, திருச்சி மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்படி, 32 இடங்களில் கழிவு நீா் கால்வாயில் கலக்கிறது எனக் குறிப்பிடப்பட்டது. இருப்பினும், வெளியேற்றும் இடங்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே உள்ளது. எனவே, கழிவு நீா் கலப்பதை தடுத்து உய்யங்கொண்டான் கால்வாய், விவசாய நிலங்கள், சுற்றுப்புறச் சூழலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும்.
வழக்கு விசாரணை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

