திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் தனது டிராக்டர் மற்றும் நகைகளை மீட்டு தர கோரி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் கணவர்,மற்றும் மகன்,திருமணமான மகள் உள்ளனர்.
தனலட்சுமி அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்வதுடன் ஆடு, மாடு மேய்த்து வருகிறார்.
இவரிடம் டிராக்டர் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு,அதிமுக பிரமுகர் மிரட்டுவதால் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.தீக்குளிக்க முயன்ற நபரை அங்கிருந்த காவல்துறையினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி மாவட்டம், புலிவலம் அருகே வலையப்பட்டியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், அதிமுக பிரமுகர் என கூறப்படுகிறது. இவர் தனலட்சுமியிடம் உள்ள டிராக்டரை வாடகைக்கு பெற்றுக் கொண்டு பணம் தருவதாக கூறியுள்ளார். மேலும் அவரிடம் இருந்த 2 1/2 பவுன் நகையை பெற்றுக்கொண்டு அதற்கு உரிய தொகையையும் சேர்த்து நகையுடன் திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். அந்த நகையை திரும்பத் தராமலும் ட்ராக்டரையும் தராமலும் அந்த நபர் காலம் கழித்து வந்துள்ளார். கடந்த 4 வருடங்களாக தனலட்சுமி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது டிராக்டர் மற்றும் நகைகளை மீட்டு தர கோரி தீக்குளிக்க முயன்றார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். உடனடியாக தீக்குளிக்க முயன்ற தனலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

