சொல்லுக்கும், செயலுக்கும் மாறாக செயல்படும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் தீர்மானம்.
மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே பஞ்சப்பூர் புதிய மார்க்கெட்டில் இடம்.
வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு
காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தீர்மானம்.
திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 56-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த சங்கத்தின் தலைவராக கே.டி.தங்கராஜ், செயலாளராக கே.ஏ.எச்.ஜமால் முஹம்மது, பொருளாளராக எம்.கே.எம். காதர் மைதீன் ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அசைவ உணவு விருந்தும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- .
தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு 2020-ல் எதிர்க்கட்சியாக இருந்த போது திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளை கள்ளிக்குடி புதிய மார்க்கெட்டிற்கு இடமாற்றம் செய்ததை எங்களோடு இணைந்து எதிர்ப்புத் தெரிவித்து எங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவாக இருந்துவிட்டு, தற்போது பஞ்சப்பூர் புதிய காய்கறி வளாகத்தை அவசர கதியில் உடனே திறப்பு விழா நடத்த முற்படுவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தற்போது காந்தி மார்க்கெட் ரூ. 60 கோடியில் புனரமைக்கப்பட்டு, அருகில் உள்ள மகளிர் சிறைச்சாலையை அகற்றி விட்டு, அந்த இடத்தில் மார்க்கெட் விரிவாக்கம் செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் என்று சட்டமன்றக் கூட்டத்திலேய அறிவித்து விட்டு, சொல்லுக்கும், செயலுக்கும் மாற்றமாக செயல்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அரசு மூன்று கோரிக்கைகளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய மார்க்கெட் எங்கு அமைத்தாலும் தரைத் தளத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும். மாடிகள் இருக்கக் கூடாது.புதிதாக கட்டப்படும் காய்கறி மார்க்கெட், திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். வேறு வெளி நபர்களுக்கோ, வெளி ஊர் வியாபாரிகளுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எக்காரணம் கொண்டும் ஒதுக்கீடு செய்யக்கூடாது.
சென்னை – கோயம்போடு காய்கறி மார்க்கெட் போலவே, அரசு நிர்ணயிக்கும் தொகைக்கு, எங்களுக்கு சொந்தமாக வழங்க வேண்டும்.
எங்களது தீர்மானங்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது ஆதரவு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
14-11-2025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியருடன் நடந்த காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் சந்திப்பின் போது, எத்தனை கடைகள், என்னென்ன அளவுகள் தேவை என்பதை, எழுத்துப்பூர்வமாக ஆட்சித்தலைவர் கேட்டதின் அடிப்படையில் நாங்கள் அதன் அளவுகளையும், கடைகளின் எண்ணிக்கையும் உள்ள விபரமான கடிதங்களை இணைத்து கோரிக்கை மனு கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிய மார்க்கெட்டில் காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு தேவையான கடைகள் மற்றும் அளவுகளை நாங்கள் தெரிவித்துள்ளோம்.அதன்படி வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
1000 முதல் 2000 சதுர அடி கடைகளில் ஊழியர்கள் 10 முதல் 20 பேர் இருப்பார்கள். வெளியூரிலிருந்து வந்து தினசரி தங்கும் விவசாயிகள் ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 15 பேர் இருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு 1000 முதல் 2000 சதுர அடி அளவுள்ள கடைகளுக்கு உள்ளேயே தனித்தனி கழிப்பிட வசதி அவசியம் தேவைப்படுகிறது.
சென்னை-கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு சொந்தமாக அமைத்துக் கொடுத்ததைப் போன்று, புதியதாக அமையவிருக்கும் திருச்சி-பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் கடைகளை, திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளான எங்களுக்கு, சொந்தமாக (விலைக்கு] அமைத்து தருமாறுகேட்டுக்கொள்கிறோம்.
புதியதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கடைகளை, திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளான எங்களுக்கு மட்டுமே வழங்கவேண்டுமென்றும், எந்த வெளியூர் வியாபாரிகளுக்கும் கடைளை தரக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

