திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .
தஞ்சை மாவட்டம் பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அஞ்சுக் கோட்டை மேல வயலைச் சேர்ந்த பீட்டர் அனோசின் (வயது 29) என்பவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு வாடகை அடிப்படையில் ஜெ.சி.பி. வாகனத்தை கேட்டார். அவரது பேச்சை நம்பி, கடந்த 5-ந்தேதி அன்று பிரபாகரன் தனது வாகனத்தை கொண்டு வந்து பீட்டர் அனோசினை சந்தித்தார். அந்த நேரத்தில், பீட்டர் அனோசின் ரூ.70 ஆயிரம் பணம் கொடுத்து, பிரபாகரனிடம் அந்த வாகனத்தை திருச்சி பால்பண்ணை பெட்ரோல் பங்கில் நிறுத்துமாறு கூறினார், அவர் அடுத்த நாள் காலையில் ஒப்பந்த நகலை கொண்டு வந்து கொடுத்து விட்டு ஜெசிபி வாகனத்தை வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.

பிறகு அடுத்த நாள் பிரபாகரன் அந்த இடத்திற்கு வந்து பார்த்த போது ஜெசிபி வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக பிரபாகரன் பீட்டர் அனோசின்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்ற போது அவரை தொடர்பு கொள்ள உள்ள முடியவில்லை. போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது .
பிறகு தான் ஏமாற்றப்பட்டு இருப்பத்தை உணர்ந்தார். பிறகு இந்த சம்பவம் தொடர்பாக, பிரபாகரன் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார் .அந்த புகாரின் போரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

