ராமஜெயம் கொலை தொடர்பாக திருச்சி காவேரி திரையரங்கில் சதித்திட்டம் . நள்ளிரவில் டிஐஜி வருண்குமார் அதிரடி விசாரணை
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி திரையரங்கில் டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் .
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் கே என் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலஙகாததால் சி.பி.சி.ஐ.டிக்கும் அதன் பின் சி.பி.ஐக்கும் வழக்கு மாற்றி விசாரிக்கப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் வருகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின் சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மீண்டும் மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பாக 12 ரெளடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் செய்யப்பட்டது. ஆனால் அதிலும் எந்த விவரங்களும் கிடைக்கவில்லை இந்த நிலையில் அந்த வழக்கை விசாரிக்க டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு அவர்கள் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிசிஐடி டிஐஜி யாக இருக்கக்கூடிய வருண் குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். டிஐஜி வருண் குமார் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக பல இடங்களில் விசாரணை நடத்தி வரும் டி ஐ ஜி வருணன் குமார், நேற்று இரவு திருச்சி பாலக்கரை அருகே செயல்படும் காவேரி திரையரங்கில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
திரையரங்க உரிமையாளர் மோகன் மற்றும் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார். இந்த திரையரங்கம் ராமஜெயம் கொலை நடந்த 2012 ஆம் ஆண்டில் சசிகலா உறவினர் திவாகருக்கு சொந்தமாக இருந்தது என கூறப்படுகிறது
.அதன் பின் திரையரங்கு வேறு சிலர் வாங்கி உள்ளனர். சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த இந்த திரையரங்கு புனரமைப்பு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.
ராமஜெயம் கொலை தொடர்பாக திரையரங்கில் வைத்து ஏதும் சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

