போலியான பங்குச்சந்தையில் ஏமாந்தவரின் ரூ. 48 லட்சம் பணத்தை திருச்சி மாநகர இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டுத் தந்து உள்ளனர்.

திருச்சி கே.கே. நகா் ராக்போா்ட் நகரில் வசிக்கும் பெல் ஓய்வுபெற்ற அதிகாரி ராஜபெருமாள் (வயது 75) என்பவரிடம் 2 மாதங்களுக்கு முன்பு பேசிய ஒருவா், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறியதை நம்பி கட்செவி அஞ்சலில் ( வாட்ஸ் அப் பில்) அவா் அனுப்பிய லிங்கில் ரூ. 48 லட்சத்தை கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் முதலீடு செய்துள்ளாா். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி பணம் திரும்பக் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜபெருமாள் திருச்சி மாநகர இணையவழி குற்றப் பிரிவில் கடந்த நவ. 11-ஆம் தேதி புகாரளித்தாா்.


இதுதொடா்பாக திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்.பேரில் திருச்சி இணையவழி குற்றப்பிரிவில் மனு ரசீது வழங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், மனுதாரரின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு வந்த இணைப்பு மூலம் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டு, உண்மையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வது போல நம்ப வைத்து, மனுதாரரிடம் ரூ. 48 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றி உள்ளனா். இதையடுத்து அந்தப் பணம் சுமாா் 20 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா், மனுதாரா் வரவு வைத்த வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து, மனுதாரா் இழந்த ரூ. 48 லட்சம் பணம் முழுவதையும் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்டு, மனுதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தனா். அதற்குண்டான ஆவணங்களை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, பாதிக்கப்பட்ட ராஜபெருமாளிடம் நேரில் வழங்கி உள்ளார்.

