கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் வியாபாரிகள் அமைச்சர்களுடன் இன்று நேரில் சந்திப்பு.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட்
அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைச்சர்களுடன் இன்று நேரில் சந்திப்பு.
திருச்சி பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிக வளாகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை தனித்தனியே இன்று நேரில் சந்தித்து காந்திமார்க்கெட் வியாபாரிகள் மனு அளித்தனர்.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் குறித்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.காதர் மைதீன், செயலாளர் என்.டி..கந்தசாமி, பொருளாளர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில்,
அவைத் தலைவர் யு.எஸ்.கருப்பையா, இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.டி முகமது சபி, ஆலோசகர் ஏ.எம்.பி. அப்துல் ஹக்கீம், துணைத்தலைவர்கள் கே.டி.தங்கராஜ், சின்னாபாட்ஷா, துணை செயலாளர்கள் ஜமால் முகமது, சுலைமான், மற்றும் கூட்டமை ப்பை சேர்ந்த 25 வியாபார சங்கங்களின் நிர்வாகிகள் அமைச்சர்கள் கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை இன்று தனித்தனியே நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதிய மார்க்கெட் வளாகம் அமைப்பது தொடர்பாக கடந்த 29-6-2024 அன்று அப்போதைய கலெக்டர் தலைமையில் நடைபெற்ற காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தற்போது அமைக்கப்படவுள்ள காய்கறி மார்க்கெட் வளாகத்தில் 822 கடைகள் மட்டுமே கட்டப்படுகிறது.
ஆனால் காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் சுமார் 2500 வியாபாரிகள் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமில்லை. இதே போல வெங்காய மண்டி, வாழைக்காய் மண்டி, பழ மண்டிகளுக்கு என தனியாக இடங்கள் ஒதுக்கப்படவில்லை. புதிய மார்க்கெட் அமைக்க 23 ஏக்கர் ஒதுக்கப்பட்டாலும், 1 ஏக்கரில் மட்டுமே கடைகள் அமைப்பதாகவும் , மீதமுள்ளவை காலியிடங்களாகவே கிடக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் எனக்கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
அப்போது மீண்டும் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உங்கள் விருப்பப்படிதான் புதிய காய்கனி வளாகம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் எங்கள் விருப்பப்படியே அங்கு மார்க்கெட் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதற்கிடையே கடந்த 9-5-2025 அன்று முதல்-அமைச்சர் பஞ்சப்பூர் காய்கனி மார்க்கெட்டுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தநிலையில் ரூ.236 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகம் கட்டுமான பணிகள் தீவிரம் என்று நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய வளாகம் எதற்காக கட்டப்படுகிறது என்றும், அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் எங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்.
மேலும், அங்கு பெரிய அளவிலான லாரிகள் வந்து செல்லவும் வசதி ஏற்படுத்தி கொ டுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அமைச்சர்கள் இருவரையும் சந்தித்த பின்னர், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.காதர் மைதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாநகரில் 6.40 ஏக்கரில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்றும், இடமாற்றம் செய்யப்படாது என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது .
ஆனால் அமைச்சர் கே.என்.நேரு பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகம் கட்டி முடித்த பின் டெண்டர் முறையில் ஏலம் விடப்படும் என்றும் அதில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த கருத்து எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 9.5.2025 அடிக்கல் நாட்டு விழாவிற்கு 2 நாட்களுக்கு முன்னாள் காந்தி மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேசி விட்டு தான் கட்டிட பணிகளை ஆரம்பிப்போம் என்று அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இன்று அவர் சொல்லும் கருத்து மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 2 ஆயிரம் வியாபாரிகளுக்கு மேல் இருக்கும் காந்தி மார்க்கெட்டில் 950 நிலையான கட்டிட கடைகள் இருக்கும் பட்சத்தில் பஞ்சப்பூர் புதிய மார்க்கெட்டில் 700 கடைகள் மட்டுமே கட்டப்படுகிறது.
அதில் உருளை , வெங்காய மண்டிகள், பழ மண்டிகள், ஆகியவற்றிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. அதையும் அமைச்சரிடம் சுட்டி காட்டியுள்ளோம். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்க வேண்டும். மற்றவர்களை அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பஞ்சப்பூரில் எந்தெந்த கடைகள் செயல்படும், காந்தி மார்க்கெட்டில் எந்தெந்த கடைகள் செயல்படும் என்று தெளிவான பதில் அளிக்கப்பட வேண்டும்.
இதனால், பஞ்சப்பூர் மார்க்கெட் தொடர்பான குழப்பம் தீரவில்லை.
காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையை மாற்றுவதற்கு இடம் பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதன்படி, மகளிர் சிறையை இங்கிருந்து மாற்றிவிட்டு அந்த இடத்தில் சில்லறை வியாபாரத்துக்கும், தற்போது உள்ள மார்க்கெட்டை மொத்த வியாபாரத்துக்கும் ஒதுக்கீடு செய்தால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விரைவில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அனைவரையும் அழைத்து அமைச்சர்கள், கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். கூட்டத்தில் எங்கள் கருத்துக்களை முழுமையாக கேட்டு அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம்.
இவ்வாறு காதர் மைதீன் கூறினார்.

