ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 44 பந்தில் 144 ரன்கள்.14 வயது சூர்யவன்சி உலக சாதனை. இந்தியா அபார வெற்றி .
ஆசியக் கோப்பை 2025 ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் கத்தார் நாட்டின் தலைநகர் தோகா நகரில் நேற்று நவம்பர் 14ஆம் தேதி துவங்கியது.
அத்தொடரில் இந்தியா ஏ அணி தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு வைபவ் சூரியவன்சி . முதல் பந்தில் கொடுத்த கேட்சை அமீரக வீரர்கள் கோட்டை விட்டனர். இதுதான் அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்தது. பின்னர் அமீரக பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். எதிர்புறம் ப்ரியான்ஸ் ஆர்யா 10 (6) ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த நமன் திர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 34 (23) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் இந்தப் பக்கம் அமீரக பவுலர்களுக்கு கருணைக் காட்டாமல் அடித்து நொறுக்கிய சூரியவன்சி வெறும் 17 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். எதிர்புறம் வந்த கேப்டன் ஜிதேஷ் சர்மா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். மறுபுறம் தொடர்ந்து சரவெடியாக விளையாடிய சூரியவன்சி 32 பந்துகளில் சதத்தை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 2வது வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட் சாதனையை சூரியவன்சி சமன் செய்தார். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு டெல்லிக்காக சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் ரிஷப் பண்ட்டும் 32 பந்துகளில் சதத்தை அடித்துள்ளார். உர்வில் பட்டேல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் 28 பந்துகளில் சதத்தை அடித்து அப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
அத்துடன் ஒரு தேசிய அணிக்காக மிகவும் இளம் வயதில் (14 வருடம் 232 நாட்கள்) சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக வங்கதேச ஏ அனிக்காக முஸ்பிகர் ரஹீம் 16 வருடம் 171 நாட்கள் வயதில் சதமடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 11 பவுண்டரி 15 சிக்சர்களைப் பறக்க விட்ட சூரியவன்சி 144 (42) ரன்களை 342.86 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஜிதேஷ் சர்மா 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83* (32) ரன்கள் குவித்தார். கூடவே நேஹல் வதேரா 14 (9), ரமந்திப் சிங் 6* (8) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா ஏ அணி 297/4 ரன்களை அதிரடியாக குவித்து.
அடுத்ததாக விளையாடி அமீரக அணி 20 ஓவரில் 149/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக சோகைப் கான் 63 ரன்கள் எடுத்தும் படுதோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் 148 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் 3, ஹர்ஷ் துபே 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

