கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், கடந்த 16-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, ஒரு இளம்பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, 6.5 சவரன் நகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை பகுதியில் முதியவருடன் பேச்சு கொடுத்த அந்த இளம்பெண், தன்னைத் திட்டக்குடியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னைத் திட்டக்குடி எல்லையில் கொண்டுபோய் விடுமாறு கோரியுள்ளார். முதியவரும் அப்பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
செந்துறை அருகே உள்ள வங்காரம் காப்புக் காட்டுப்பகுதியில் சென்றபோது, அப்பெண் திடீரெனத் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, குழுமூர் வரை கொண்டுபோய் விடுமாறு கேட்டுள்ளார். அதேசமயம், முதியவருடன் செல்லும் வழியில், அப்பெண் இரட்டை அர்த்தப் பேச்சுகள் மற்றும் ஆசையைத் தூண்டும் வகையில் ஆபாசமாகப் பேசி, முதியவரை தன் வலையில் விழ வைத்துள்ளார்.
அவரது பேச்சில் சபலம் அடைந்த முதியவர், அந்தப் பெண்ணுடன் காட்டுக்குள் ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கே இருவரும் மது அருந்திவிட்டு, முதியவர் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவர்கள் உல்லாசமாக இருந்த சமயத்தில், அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் திடீரென அங்கே வந்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து முதியவரை அடித்து உதைத்து, அவர் அணிந்திருந்த 6.5 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட முதியவர் தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது அரியலூர் மாவட்டம் சிலம்பூரைச் சேர்ந்த பாஞ்சாலை என்கிற கலையரசி (வயது 35) மற்றும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் நவீன்குமார் (வயது 30) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் இருவரும் செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கலையரசி திருச்சி மகளிர் சிறையிலும், நவீன்குமார் அரியலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
ஆசை வலையில் முதியவரைச் சிக்கவைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

