திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 18 பேரை தீபாவளி அன்று போலீஸாா் கைது செய்தனா்.
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையில் என காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருச்சி மாநகரில் எடமலைப்பட்டிப்புதூா், நீதிமன்ற காவல் நிலையம், பொன்மலை, அரியமங்கலம், கே.கே.நகா், விமான நிலையம், ஸ்ரீரங்கம், தில்லை நகா், அரசு மருத்துவமனை மற்றும் உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்த நேரக் கட்டுப்பாடு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 18 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.