தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கனமழை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.