திருச்சியில் 4 மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை
ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.
திருச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு தந்த ஆங்கில ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
திருச்சி கே கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலர் நேற்று மாவட்ட குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். தொடர்ந்து 4 மாணவிகள் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.
உடனடியாக இந்த புகார் குறித்து விசாரணையை தொடங்கிய மாவட்ட குழந்தைகள் உதவி அலுவலர்கள் மாணவிகள் அளித்த புகார் குறித்து கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி திருச்சி கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வரும் கருமண்டபத்தை சேர்ந்த டேனியல் சுரேஷ் (வயது 46) என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கே.கே .நகர் மாநகராட்சி பள்ளியில் இருந்து மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது திருச்சியில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.